அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி!

in News / Education

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இனி தினமும் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு உடல்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்கள் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திட முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உடல்சார்ந்த பயிற்சிகள் பள்ளிகள் அளவில் முதலில் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது. அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு 2 பாடவேளைகள் மட்டும் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மாணவ-மாணவிகளின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல்சார்ந்த பயிற்சிகள் கொண்டுவரப்படும் பட்சத்தில் பாடச்சுமையின் காரணமான மனஅழுத்தம் குறைந்து கற்றல்திறன் மேம்படும் நிலை ஏற்படும். இதன் மூலம் பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கக்கூடிய உடற்தகுதி மற்றும் ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படும். எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன்னர் 15 நிமிடமும், மாலை 45 நிமிடமும் என ஒரு மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் மாணவர்களின் உடற்தகுதி மேம்படுவதோடு, தனித்திறன், ஆளுமை மேம்பாடு, கற்றல் திறன் அதிகரிக்கும்.

இதனை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். உடல்சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, நடனம், யோகா, உடற்பயிற்சி ஆகிய அனைத்து அம்சங்களும் இடம்பெற வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top