10 வருடங்களுக்கு முன்பு அருமனையில் புதைக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உடல் தோண்டி எடுப்பு

10 வருடங்களுக்கு முன்பு அருமனையில் புதைக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உடல் தோண்டி எடுப்பு

in News / Local

குமரி மாவட்டம் அருமனை தேமானூர் பாலம் அருகே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முதியவர் பிணம் ஒன்று கிடந்தது. இந்த பிணத்தை அருமனை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் யாரென்ற விவரம் தெரியவில்லை.

மேலும் உடலையும் யாரும் வாங்க வரவில்லை. இதனையடுத்து போலீசார், அந்த உடலை அருமனை புண்ணியம் பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கேரள மாநிலம் பாறசாலை ஆரையூர் பகுதியை சேர்ந்த ஷாதி (வயது 47) என்பவரை பாறசாலை போலீசார் கொலை வழக்கில் செய்தனர். அதாவது, ஷாதி, தன்னுடைய நண்பர் வினுவை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் துப்பு துலக்கியதில் ஷாதி சிக்கினார்.

மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஷாதி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சொத்து தகராறில் தனது தந்தையை கொன்று விட்டு அருமனை அருகே உடலை வீசிய திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த உடலை தான் அருமனை போலீசார் அனாதை பிணம் என கருதி புதைத்த தகவலும் தெரியவந்தது. மேலும் இதுபற்றி வெளியான பரபரப்பான தகவல்கள் விவரம் வருமாறு:-

ஷாதியின் தந்தை பெயர் கிருஷ்ணன் (67). முன்னாள் ராணுவ வீரர். ஷாதிக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனை ஷாதி, தன்னுடைய நண்பர் வினுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் எப்படியாவது, தந்தையை தீர்த்து கட்டி விட்டு சொத்து முழுவதையும் அபகரிக்க வேண்டும் என்று ஷாதி திட்டமிட்டார். அதற்கு வினுவின் உதவியையும் நாடினார்.

இதனையடுத்து அவர்கள் திட்டமிட்டபடி கிருஷ்ணனை அடித்து கொலை செய்தனர். பின்னர் வாகனத்தில் கொண்டு வந்து உடலை குமரி மாவட்டம் அருமனை தேமானூர் பாலம் அருகே வீசி விட்டு சென்று விட்டனர்.

தந்தையை கொன்ற பிறகு ஷாதி, நண்பர் வினுவுடன் சேர்ந்து உல்லாசமாக பொழுதை கழித்துள்ளார். தந்தையிடம் இருந்து அபகரித்த சொத்தை ஒவ்வொன்றாக விற்று, தான் நினைத்தபடி ஷாதி இருந்துள்ளார். அந்த மாதிரியே அவர் பல வருடங்களை கழித்தார். தந்தையை கொன்று பல வருடங்கள் ஆகி விட்டது. இனிமேல், நாம் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று நினைத்த நேரத்தில், அவருக்கு ஒரு பேரிடி ஏற்பட்டது.

அதாவது, தந்தையை கொல்வதற்கு உறுதுணையாக இருந்த நண்பன் வினுவே வில்லனாக மாறினார். நீ உன்னுடைய தந்தையை கொன்ற விவரம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்றால், கேட்கும் போது பணம் தர வேண்டும். இல்லையென்றால் போலீசிடம் கூறி விடுவேன் என்று ஷாதியை வினு அடிக்கடி மிரட்டியுள்ளார்.

ஷாதியும் பயந்து போய் அடிக்கடி வினுவுக்கு பணம் ெகாடுக்க ஆரம்பித்தார். வினுவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், தந்தையை கொன்றது போல் வினுவையும் கொல்ல ஷாதி திட்டமிட்டார். அதன்படி வினுவை அவர் தீர்த்து கட்டினார். இந்த வழக்கில் பாறசாலை போலீசாரிடம் ஷாதி சிக்கினார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தந்தையை கொன்ற விவரமும் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து அருமனையில் புதைக்கப்பட்ட கிருஷ்ணனின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

விளவங்கோடு தாசில்தார் புரேந்திரதாஸ், பாறசாலை சப்-இன்ஸ்பெக்டர், அருமனை போலீசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 10 வருடங்கள் ஆனதால், எலும்பு கூடாக காட்சி அளித்தது. பின்னர் பரிசோதனைக்காக எலும்பு கூடு கொண்டு செல்லப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top