தக்கலை அருகே வீடு புகுந்து, வீட்டுக்குள் புதைக்கப்பட்ட 112½ பவுன் நகைகள் கொள்ளை

தக்கலை அருகே வீடு புகுந்து, வீட்டுக்குள் புதைக்கப்பட்ட 112½ பவுன் நகைகள் கொள்ளை

in News / Local

தக்கலை அருகே கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜையன் (வயது 60). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

ராஜையனின் மூத்த மகன் சுரேஷ்பாபு (34). இவர் தன்னுடைய மனைவி பிரித்தா, 1½ வயது ஆண் குழந்தையுடன் ராஜையன் வீட்டின் அருகில் வசித்து வந்தார். மற்றவர்கள் ராஜையனின் வீட்டில் தங்கி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு ராஜையன் குடும்பத்தினர் அனைவரும் குமாரகோவிலில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்தனர்.

ஆட்டோவில் பயணம் செய்த பிரித்தா, உடல்நிலை சரியில்லாத தன்னுடைய தோழியை பார்த்து விட்டு வருவதாக இடையில் இறங்கி விட்டார்.

பின்னர் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்த ராஜையன் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, வீட்டுக்குள் பிரித்தாவின் அலறல் சத்தம் கேட்டது. பதறி அடித்து ஓடி சென்று பார்த்த போது, அங்கு பிரித்தாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய நிலையிலும், கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கிய நிலையிலும் கிடந்தார்.

உடனே பதற்றமடைந்த குடும்பத்தினர், பிரித்தாவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து பிரித்தா அவர்களிடம் கூறுகையில், தோழியை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது வீடு திறந்த நிலையில் கிடந்ததால் ஓடி வந்து பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர், என்னை தாக்கி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி விட்டும், மிளகாய் பொடி தூவியும் தப்பி சென்றதாக தெரிவித்துள்ளார்.

உடனே பிரித்தாவின் மாமனார் ராஜையன் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். அந்த அறையின் ஓரத்தில் தான் அவர் குழி தோண்டி 112½ பவுன் நகைகளை ராஜையன் புதைத்துள்ளார். அந்த நகைகள் பத்திரமாக இருக்கிறதா? என பார்த்துள்ளார். ஆனால் நகைகளை காணவில்லை. இதனால் முகமூடி அணிந்த மர்மநபர்கள் தான் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று நினைத்தார். உடனே அவர் மருமகள் கூறிய தகவலுடன், நகைகள் காணாமல் போனது குறித்து ராஜையன் தக்கலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, திருடர்களுக்கு பயந்து நகைகளை புதைத்து வைத்த தகவல் குடும்பத்தினருக்கு மட்டும் தான் தெரியும். தோண்டப்பட்ட குழிக்கு மேல் பழைய டி.வி. மூடைகள் மற்றும் பொருட்களை வைத்திருந்தேன். அது அப்படியே உள்ளதாக ராஜையன் போலீசிடம் தெரிவித்தார். பொதுவாக வீட்டில் பீரோ அல்லது ஏதாவது மறைவான இடத்தில் தான் நகைகளை வைத்திருப்பார்கள். இந்த நகைகள் தான் கொள்ளையர்கள் கையில் சிக்கும்.

ஆனால் முகமூடி அணிந்த மர்மநபர்கள், ராஜையனின் வீட்டில் புதைக்கப்பட்ட நகைகளை எப்படி கொள்ளையடித்தார்கள் என்று தெரியவில்லை.

மேலும் இந்த கொள்ளையில் எங்களுக்கு பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிரித்தாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் புதைக்கப்பட்ட 112½ பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top