விஷம் வைத்து 12 மயில்கள் சாகடிப்பு - விவசாயி கைது!

விஷம் வைத்து 12 மயில்கள் சாகடிப்பு - விவசாயி கைது!

in News / Local

ராமநாதபுரம் அருகே முதுனாள் கிராமத்தில் உள்ள வயல்களில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது . இதைத்தொடர்ந்து வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனகாப்பாளர் சடையாண்டி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது வயல்வெளியில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 6 ஆண் மயில்கள், 6 பெண் மயில்கள் என மொத்தம் 12 மயில்கள் இறந்து கிடந்தன. விசாரணையில் அந்த மயில்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டதும், இதற்காக வயல் வரப்புகளில் விஷம் கலந்த நெல் தானியங்கள் தூவப்பட்டு கிடந்ததும் தெரியவந்தது. உடனடியாக சூரங்கோட்டை கால்நடை டாக்டர் சாரதா மற்றும் குழுவினர் வரவழைக்கப்பட்டு, இறந்த மயில்களை பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் சதீஷ் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, முதுனாள் கிராமத்தில் தெற்குத்தெருவை சேர்ந்த விவசாயி கோபி (வயது 43) என்பவர்தான் நெல்லில் விஷம் கலந்து வைத்து மயில்களை கொன்றது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது, நெற்பயிரை எலிகளும், மயில்களும் சேதப்படுத்துவதால் பூச்சி மருந்தினை நெல் தானியங்களில் கலந்து வைத்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து கோபியை வனத்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:-

தேசிய பறவையான மயில், வனஉயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவனை 1-ல் வரக்கூடிய பறவையாகும். மயில்களை வேட்டையாடுவது, கொல்வது, அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, துன்புறுத்துவது குற்றமாகும். மயில்களை தானியங்களில் விஷம் வைத்து கொன்றது கடுமையான குற்றமாகும். இதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. பிடிபட்டுள்ள கோபி ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

விவசாயிகள் தங்களின் வயல்களில் பயிர்களை பாதுகாக்க வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பறவைகள், விலங்கினங்களை விஷம் வைத்து கொல்வது குற்றமாகும். இதனை மீறி யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வனத்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top