குமரியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 வகையான இனங்கள் கண்டுபிடிப்பு!

குமரியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 வகையான இனங்கள் கண்டுபிடிப்பு!

in News / Local

வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் குளிர்கால தொடக்கத்திலும், குளிர்காலம் முடிவடைந்த பிறகும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் தற்போது குளிர்காலம் தொடங்கிய நிலையில் குமரி மாவட்ட வனத்துறை சார்பில் நேற்று நடந்த கணக்கெடுப்பில் 120 வகையான பறவையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் தெரிவித்தார்.

நேற்று காலை 5 மணி முதல் 6 மணி வரை மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறையினர், பறவைகள் ஆர்வலர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோருக்கு பறவைகளை கணக்கிடுவது எப்படி? பறவை இனங்களை கண்டறிவது எப்படி? என்பது பற்றிய பயிற்சி வகுப்பு நாகர்கோவில் வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் நடந்தது.

பின்னர் காலை 6 மணி முதல் 8 மணி வரை நீர் நிலைகளுக்கு நேரடியாகச் சென்று பறவைகளை கணக்கிடும் பணி நடந்தது. சுசீந்திரம் பெரிய குளம், தேரூர் குளம், மணக்குடி காயல், ராஜாக்கமங்கலம் காயல், மாணிக்க புத்தேரி குளம், தத்தையார்குளம், பறக்கை குளம், பாறைகாத்தான்குளம் ஆகியவற்றில் இந்தப்பணி நடந்தது. வனத்துறையினர், பறவைகள் ஆர்வலர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தனித்தனியாக சென்று பறவைகளை கணக்கிட்டனர்.

ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம் மொத்தம் 14 குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பைனாகுலர் கருவி மற்றும் பறவைகள் விவரம் அடங்கிய புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது. மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் தலைமையில் பறவை ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப், ஒருங்கிணைப்பாளர் திருவரனார் உள்ளிட்டோர் மணக்குடி காயல், புத்தளம் ஆகிய பகுதிகளில் பறவைகளை கணக்கிட்டனர். காலை 8 மணியுடன் இந்த பணி நிறைவடைந்தது.

பின்னர் பறவைகள் கணக்கீட்டு குழுவினர் வடசேரியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு வந்து தாங்கள் கணக்கிட்ட பறவைகள் இனங்களை ஒட்டுமொத்தமாக கணக்கிடும் பணி நடைபெற்றது. நேற்று நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் கூறியதாவது:-

ஒவ்வொரு பருவகால மாற்றம் ஏற்படும்போதும் பறவைகள் இடம்பெயர்வது வழக்கம். குமரி மாவட்டத்தில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பறவைகளும் வந்து செல்கின்றன. இன்று (அதாவது நேற்று) நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக மணக்குடி காயல், புத்தளம் ஆகிய பகுதிகளில் குமரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டு முழுவதும் இருக்கக்கூடிய கிரேட்டர் பிளமிங்கோ பறவைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஒருசேர இருப்பதை பார்த்தோம். மேலும் பெலிக்கான் பறவை, கூழக்கடா பறவை, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பின்டெயின் டெக் பறவை மற்றும் ஓப்பன்பில்ட் ஸ்டோர்க், வெஸ்டர்ன் ரீப் ஹெரான், பைப்பர், ரெட் ஷேங் போன்ற பறவையினங்கள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளன. பறவையினங்களின் முழுமையான விவரம் நாளை (அதாவது இன்று) தெரிய வரும்.என கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top