குமரி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 1,963 வழக்குகளுக்கு தீர்வு!

குமரி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 1,963 வழக்குகளுக்கு தீர்வு!

in News / Local

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி நேற்று நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. அதுபோல,குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நேற்று லோக் அதாலத் நடந்தது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான (பொறுப்பு) எம்.கோமதிநாயகம் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராபின்சன் ஜார்ஜ், நாகர்கோவில் கோர்ட்டு லோக் அதாலத் தலைவர் மகிழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதிபதிகள் ஜாண் ஆர்.டி.சந்தோசம், அப்துல்காதர், ஜோசப்ஜாய், ராஜகுமார், ஆஷா கவுசல்யா சாந்தினி, நம்பி, ராமலிங்கம், அருணாச்சலம், பாக்கியராஜ், மாஜிஸ்திரேட்டுகள் கிறிஸ்டியன், முருகேசன், தீனதயாளன், சத்தியமூர்த்தி ஆகியோர் 8 அமர்வுகளாக லோக் அதாலத்தை நடத்தினர்.

இதேபோல் பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய கோர்ட்டுகளிலும் தலா ஒரு அமர்வு வீதம் 4 அமர்வுகளாக லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம் 12 அமர்வுகளில் விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டுவரி, தண்ணீர் வரி, காசோலைமோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்பநல வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் என மொத்தம் 11 ஆயிரத்து 632 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதனால் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வுகாண ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் அனைத்து கோர்ட்டுகளும் பரபரப்பாக காட்சி அளித்தது.

நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 5 கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் 1,963 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.6 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 484 வழங்க முடிவு செய்யப்பட்டது.

லோக் அதாலத் மூலம் வழக்குகளில் தீர்வு கிடைத்ததும் வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் மகிழ்ச்சியோடு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top