பேச்சிப்பாறை அணையில் மீன்பிடித்த 2 பேருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!

பேச்சிப்பாறை அணையில் மீன்பிடித்த 2 பேருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!

in News / Local

பேச்சிப்பாறை அணையில் மீன்களை பிடிக்கும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால், உரிமம் பெற்றவர்களை தவிர பொதுமக்கள் அனுமதியின்றி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு குலசேகரம் வனசரகத்தை சேர்ந்த வனவர்கள் அருண், முரளி, வன காப்பாளர்கள் ரமணன், ஜான் ஆகியோர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அணையில் இருந்து 2 பேர் வலை மூலம் மீன் பிடித்து சமைப்பதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

உடனே, ரோந்து சென்ற வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் பேச்சிப்பாறை காந்தி நகரை சேர்ந்த குமார் (வயது 42), காயல்கரை சாலையை சேர்ந்த முருகேசன் (36) என்பதும், அனுமதியின்றி அணையில் இருந்து மீன்பிடித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த மீனையும், வலையையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை குலசேகரம் வனசரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று இருவருக்கும் தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top