ராஜாக்கமங்கலத்தில் 2 கோவில்களில் நகை, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலத்தில் எம்.ஜி.ஆர்.நகர் அருகே சேத்துக்குழி சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவதற்காக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை பணிகள் முடிந்த பின் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று காலையில் தொழிலாளர்கள் வேலைக்கு வந்த போது, கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நிர்வாக குழுவினர் வந்து உள்ளே சென்று பார்த்தபோது, சாமி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, தங்க பொட்டு என 3 பவுன் நகைகள், குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள் மாயமாகி இருந்தன. இரவில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக தலைவர் அய்யப்பன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரத்தில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் கோவிலின் முன் பகுதியில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்க ப்பட்டிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் ராஜலிங்கம் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
இந்த இரண்டு கோவில்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
0 Comments