ஊராட்சித் தேர்தல் தகராறு : நள்ளிரவில் தாக்குதல் - 20 பேர் படுகாயம்!

ஊராட்சித் தேர்தல் தகராறு : நள்ளிரவில் தாக்குதல் - 20 பேர் படுகாயம்!

in News / Local

கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் நேற்றிரவு இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில், பெண்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கமுதி மற்றும் முதுகுளத்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள் நேற்று மாலை முழுமையாக வெளியிடப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 12 இடங்களையும் அ.தி.மு.க 5 இடங்களையும் கைப்பற்றியது. இதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 86, அ.தி.மு.க 54 இடங்களையும் பிடித்தது.

இந்த நிலையில் கமுதி அருகே மணலூர் கிராமத்தில் வார்டு எண் இரண்டில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஆதரவாளர்களான சப்பானி தரப்பினருக்கும் ராமர் தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. நள்ளிரவு வரையில் இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மோதலைக் கட்டுப்படுத்தினர்.

இந்த மோதலில் சப்பாணி தரப்பில் 13 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் 13 பேரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் ராமர் தரப்பில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர்கள் அனைவரும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top