நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் பரிதவித்த 23 குமரி மீனவர்கள் மீட்பு!

நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் பரிதவித்த 23 குமரி மீனவர்கள் மீட்பு!

in News / Local

கன்னியாகுமரி ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜன்(வயது 48). இவருக்கு சொந்தமான விசைப்படகில் சந்திரமோகன் உள்பட 23 மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணி அளவில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். காலை 11.30 மணியளவில், கன்னியாகுமரியில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். திடீரென விசைப்படகின் என்ஜின் பழுதானது. . இதனால் கரைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் ரோந்து படகுகள் பழுதாகி நீண்ட நாட்களாக கரையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால், ஆழ்கடலில் பரிதவித்த மீனவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், இதுபற்றி தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சக மீனவர்கள் தங்களது விசைப்படகில் ஆழ்கடலில் பரிதவித்த மீனவர்களை தேடி சென்றனர். அப்போது, பழுதான படகில் உள்ள மீனவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சக மீனவர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் பழுதடைந்த விசைப்படகை கண்டுபிடித்தனர். அந்த படகில் இருந்த 23 பேரும் உணவு, தண்ணீர் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு, பழுதடைந்த விசைப்படகையும் கயிறு மூலம் கட்டி இழுத்து நேற்று இரவு 7 மணிக்கு கரைக்கு கொண்டு வந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top