நாகர்கோவிலில் நடந்த ஆய்வில் 25 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி ரத்து!

நாகர்கோவிலில் நடந்த ஆய்வில் 25 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி ரத்து!

in News / Local

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களின் ஆய்வு நேற்று எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடந்தது. அப்போது 96 பள்ளிகளை சேர்ந்த 350 வாகனங்களை ஆய்வுக்கு அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 260 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன.

அவற்றை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல் முருகன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி, ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மபிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது வாகன தகுதிச்சான்று மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளனவா? வாகனங்களின் தரைதளப்பகுதி சரியாக இருக்கிறதா? அவசர வழி கதவு செயல்படுகிறதா? முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவை உள்ளனவா? டிரைவருக்கு உரிய தகுதிகள் உள்ளதா? அவருடைய ஓட்டுனர் லைசென்ஸ் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த வாகனங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

ஆய்வின்போது குறைபாடுகள் இருந்த வாகனங்களின் தகுதிச்சான்றுகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக தரைதளம் சேதம் அடைந்திருந்த வாகனங்கள், அவசர வழிக்கதவு திறக்கமுடியாத நிலையில் இருந்தவை, டிரைவர் கேபின் அமைக்கப்படாதவை, தீயணைப்பு கருவிகள் இல்லாமல் இருந்தது, தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தவை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 25 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதியை அதாவது தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. அந்த வாகனங்கள் 7 நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்து காண்பிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

நேற்று ஆய்வுக்கு வந்த 260 வாகனங்கள் தவிர மீதமுள்ள 90 வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் நாளை (வியாழக்கிழமை) மீண்டும் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. அன்றும் ஆய்வுக்கு வராத வாகனங்களை வருகிற 2-ந் தேதிக்குள் தோவாளை பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு இன்று (புதன்கிழமை) கோழிப்போர்விளையில் நடைபெற இருக்கிறது. 650 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top