புது மெஷினில் கள்ள நோட்டு - நாகர்கோவிலில் பிடிபட்ட கும்பல்!

புது மெஷினில் கள்ள நோட்டு - நாகர்கோவிலில் பிடிபட்ட கும்பல்!

in News / Local

கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காகத் தொடர்ச்சியாக சினிமா தியேட்டருக்குச் சென்று டிக்கெட் எடுத்த கும்பல் பிடிபட்டது. பின்னணியில் செயல்பட்ட மத்திய அரசு ஊழியரும் சிக்கினார்.

நாகர்கோவிலை சேர்ந்தவர் தினகரன். இவர் கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மத்திய மீன்வளத்துறையில் கப்பல் ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். மத்திய அரசு ஊழியராக இருந்தபோதும் மேலும் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டார். இதற்காக நாகர்கோவில் உள்ள வாட்டர்டேங்க் ரோட்டில் தனக்கு சொந்தமான கட்டடத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்றை தொடங்க முடிவு செய்தார். இதற்காக நவீன ஜெராக்ஸ் மெஷின் வாங்குவதற்காக ஆர்டர் செய்தார்.

மும்பையிலிருந்து ஜெராக்ஸ் மெஷின் பார்சல் சர்வீஸ் மூலமாக அனுப்பப்பட்டது. கொச்சியில் வேலைபார்க்கும் தினகரனால் பார்சலை நேரடியாக வாங்க முடியாததால் தன் நண்பரான பள்ளிவிளையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் மெஷினை வாங்கி கடையில் பொருத்துமாறு கூறியிருக்கிறார்.

ஜெராக்ஸ் மெஷினை பெற்றுக்கொண்ட ரமேஷ் பார்சலில் இருந்த மாடல் பேப்பர்கள் மூலம் ஜெராக்ஸ் எடுத்துப் பார்த்துள்ளார். அதில் ஒரு வகை பேப்பரில் 200 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்தபோது அச்சு அசலாக ரூபாய் நோட்டுப்போன்று காட்சி அளித்துள்ளது. இதை அருகுவிளையைச் சேர்ந்த தன் நண்பன் ஜோசப் மனோவா உடன் சேர்ந்து புழக்கத்தில் விட்டுள்ளார்.

ஜெராக்ஸ் மெஷினில் எடுத்த கள்ள நோட்டை வேறு யாரும் கண்டுபிடிக்காததால் மீண்டும் 200 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்கிடையில் ஜெராக்ஸ் மெஷின் ஆர்டர்போட்ட தினகரனுக்கு மெஷின் டெலிவரி செய்யப்பட்டதாகக் குறுந்தகவல் சென்றுள்ளது. அதை உறுதிசெய்வதற்காக ரமேஷுக்கு போனில் தொடர்புகொண்டார்.

கள்ள நோட்டு ஜெராக்ஸ் எடுப்பதில் பிஸியாக இருந்த ரமேஷ் போனை எடுக்கவில்லை. இதனால் தினகரன் நேரடியாக நாகர்கோவிலுக்கு வந்து ரமேஷை தேடிக் கண்டுபிடித்தார். ரமேஷ் கள்ள நோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டினார். தினகரன் சம்மதித்ததால் அடுத்ததாக 2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்தனர். அந்தப் பணத்துடன் ரமேஷும் ஜோசப் மனோவாவும் செட்டிகுளத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் நேற்று மதியம் சினிமா ,பார்த்துள்ளனர்.

2000 ரூபாய் நோட்டு கொடுத்து டிக்கெட் எடுத்தவர்கள், மீதமுள்ள பணத்தைப் பெற்று மகிழ்ச்சியடைந்தனர். மேலும் நேற்று இரவு 10 மணி காட்சிக்கு அதே சினிமா தியேட்டரில் சினிமாவுக்கு சென்றுள்ளனர். டிக்கெட் கவுன்டரில் சென்ற ரமேஷ் 2000 ரூபாய் நோட்டை நீட்டி டிக்கெட் கேட்டார்.

ஏற்கெனவே 2000 ரூபாய் கள்ள நோட்டு வந்ததைத் தனியாக எடுத்து வைத்த தியேட்டர் ஊழியர்கள், மீண்டும் அதே போன்ற நோட்டுடன் வந்த ரமேஷை பிடித்துவைத்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அங்கு சென்று ரமேஷ் மற்றும் ஜோசப் மனோவாவை கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின்படி தினகரனையும் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top