இரிடியம் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

இரிடியம் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

in News / Local

கன்னியாகுமரி சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த். 30 வயதான இவர் சொந்தமாக டேங்கர் லாரி வைத்து ஓட்டல் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அரவிந்திடம் நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டி பொட்டலை சேர்ந்த ஜாண் ஆல்வின் பிரபு என்ற கள்ளன் பிரபு (29) இரிடியம் தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் மோசடி செய்தார்.

இதுகுறித்து அரவிந்த் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சித்தார்த்த சங்கர்ராய், சிறப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்ட ஜாண் ஆல்வின் பிரபுவை தீவிரமாக தேடிவந்தனர்.

அப்போது மயிலாடி சந்திப்பில் நின்ற ஜாண் ஆல்வின் பிரபுவை மடக்கி பிடித்த போலீசார், அவனது கூட்டாளிகளான நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், குமுளி அருகே வண்டிப்பெரியாரை சேர்ந்த நாகராஜனையும் (42) இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

பின்னர் தனிப்படை போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

இரிடியம் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஜாண் ஆல்வின் பிரபு குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கன்னியாகுமரி, சுசீந்திரம், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளன. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 57 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

சதீஷ்குமார் சினிமாவில் உதவி இயக்குனராக உள்ளார். அவர் இயக்கிய படங்கள் இன்னும் வெளிவரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமாரையும், நாகராஜனையும் இரிடியம் இருப்பதாக கூறி ஒரு கும்பல் ஏமாற்றி உள்ளது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை போன்று நாமும் மற்றவர்களை ஏமாற்றினால் என்ன? என்று முடிவு செய்தனர். இதற்கு உதவியாக ஜாண் ஆல்வின் பிரபுவை சேர்த்துக் கொண்டனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை, புதுச்சேரி, பொன்னமராவதி, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு நபர்களிடம் இரிடியம் இருப்பதாக பித்தளை குடத்தை காண்பித்து ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

இதேபோல் சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் எந்ததெந்த ஊர்களில் எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்தனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடிக்கு பயன்படுத்திய பித்தளை குடம், மரப்பெட்டி ஆகியவையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top