குமரியில் 3 பேர் கொலை: டிரைவரை நெல்லைக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை

குமரியில் 3 பேர் கொலை: டிரைவரை நெல்லைக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை

in News / Local

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 57). சுங்க இலாகா ஊழியராக பணியாற்றியவர். இவருடைய மனைவி வசந்தி (50). இவர்கள், அபிஸ்ரீ (7) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்தனர். கடந்த 2014-ம் ஆண்டு வீட்டில் வசந்தியும், அபிஸ்ரீயும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். சுப்பையா அருகில் உள்ள வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்.

இந்த 3 கொலைகள் தொடர்பாக முதலில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மெரின் என்பவர் கைது செய்யப்பட்டார். சுப்பையா வீட்டில் தங்கக்கட்டிகள் மற்றும் பணம் இருப்பதாக கருதியும், அதனை அபகரிக்கும் நோக்கில் இந்த கொலைகளை மெரின் செய்ததும் தெரிய வந்தது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தினர்.

இதில் மெரினுடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ் (33) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்று தலைமறைவானது தெரிய வந்தது. சமீபத்தில் அவர் சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக சுரேஷிடம் விசாரணை நடத்த வேண்டி இருந்ததால், 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரிடம் சி.பி.சி.ஐ.டி. நெல்லை துணை சூப்பிரண்டு அனில்குமார், நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சுப்பையா மற்றும் அவருடைய மனைவி, வளர்ப்பு மகள் கொலைக்கு மெரின் பயன்படுத்திய கத்திகளை சுரேஷ்தான் வாங்கி கொடுத்துள்ளார். மெரினுக்கு உதவுவதற்காக அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ கன்சல்டன்சியில் இருந்து பழைய மோட்டார் சைக்கிளை சுரேஷ் விலைக்கு வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் சென்றுதான் கத்திகளை சுரேஷ் வாங்கிக் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கொலை சம்பவத்துக்குப்பிறகு சுரேஷ் அந்த மோட்டார் சைக்கிளை அஞ்சுகிராமத்தில் விலைக்கு வாங்கிய ஆட்டோ கன்சல்டன்சி கடையிலேயே மீண்டும் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தை வெளிநாட்டுக்குச் செல்ல பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் சுரேஷை அஞ்சுகிராமத்துக்கு அழைத்துச் சென்று மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த கடையை காண்பிக்கச் செய்தனர். பின்னர் அந்த கடைக்காரரிடம் சுரேஷ் விற்பனை செய்த மோட்டார் சைக்கிள் யாரிடம் உள்ளது என்று விசாரணை செய்தனர். இதில் நெல்லை மாவட்டம் மாவடியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை மாவடிக்கு அழைத்துச் சென்று அந்த மோட்டார் சைக்கிளையும், அதற்குரிய ஆவணங்களையும் பறிமுதல் செய்து, நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அதேபோல் மெரின், கொலை செய்யப்பட்ட சுப்பையாவிடம் மட்டும் பேசுவதற்காக சுரேஷ் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் சிம்கார்டு வாங்கிக் கொடுத்த கடையையும் போலீசார் அடையாளம் காட்டச் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிந்ததும் சுரேஷை ஆஜர்படுத்தவும், அவர் கொடுத்த தகவலின்பேரில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஆவணங்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top