3 பேருக்கு மனித வெடிகுண்டாக மாற பயிற்சி - எஸ்.எஸ்.ஐ கொலையில் கைதான தீவிரவாதிகள் வாக்குமூலம்!

in News / Local

எங்களது அமைப்பை தொடர்ந்து சோதனை, விசாரணை, கைது என்று துன்புறுத்தி வந்ததால் போலீசாருக்கு எங்களின் எதிர்ப்பை காட்ட எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்றோம் என்று 2 தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்களில் 3 பேர் மனித வெடிகுண்டாக மாற பயிற்சியும் பெற்றுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் தடை செய்யப்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த காஜா மைதீன், மெகபூப் பாஷா தலைமையில் அல் ஹண்ட் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி தீவிரவாத செயல்கள் நடத்தி வந்தது கர்நாடக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மெகபூப் பாஷா தலைமையிலான குழுவில் 18 பேர் உள்ளனர். இவர்களுக்கு எதிராக யுஏபிஏ சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி 11ம் தேதி பெங்களூர் போலீசார் வழக்குபதிந்திருந்தனர். மெகபூப் பாஷா தலைமறைவாகியுள்ளார். இவர்களில் 3 பேர் மனித வெடிகுண்டாக மாற பயிற்சி பெற்றவர்கள் என்பதும், கர்நாடகா, டெல்லியில் சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்து இருக்கிறது. அல் ஹண்ட் அமைப்பில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர். உடுப்பியில் இருந்து தமிழக கியூ பிரிவு போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் இந்த தகவல்கள் தெரியவந்தது. கர்நாடகாவில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும் அப்துல் சமீம் மற்றும் தவுபிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மும்பையில் வைத்து இவர்களது கையில் துப்பாக்கி தரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே இவர்களுக்கு உதவியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் 18 பேரை கியூ பிரிவு போலீசார் 14ம் தேதி இரவு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் களியக்காவிளை, திருவிதாங்கோடு, தக்கலை, கோட்டார் அருகே இளங்கடை உள்ளிட்ட இடங்களுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் இருவர் ராமநாதபுரம், ஒருவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கியூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் முழுமையான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகள் கோர்ட்டில் ஆஜர்: இதனிடையே, கைதான தீவிரவாதிகள் அப்துல்சமீம், தவுபீக் ஆகியோரிடம் தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, அவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தனர்.

அதில், களியக்காவிளை சப்இன்ஸ்பெக்டர் வில்சனை நாங்கள்தான் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம். நாங்கள் நடத்திய தாக்குதல் என்பது ஆட்சி அதிகாரத்திற்கும், போலீசாருக்கும் எதிரான எங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாகும். எங்களது அமைப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து சோதனை, விசாரணை, கைது என்று துன்புறுத்தி வந்தனர். அதனால் போலீசாருக்கு எங்களின் எதிர்ப்பை காட்டவும், எங்களது அமைப்பின் சக்தியை வெளிப்படுத்தவும் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம் என்று தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 20ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ஜெயசங்கர் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து இருவரையும் ஜெயிலில் அடைக்க பாளையங்கோட்டை சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

இதுகுறித்துகுமரி மாவட்ட எஸ்.பி நாத் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கிடைக்கவில்லை,முழுமையான விசாரணை இன்னமும் நடத்தப்படவில்லை. எனவே குற்றவாளிகளை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அப்போதுதான் இந்த வழக்கு தொடர்பான நிறைய விஷயங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது அனைத்து சோதனை சாவடிகளிலும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என்பது முழுமையான விசாரணை முடிந்த பின்னர்தான் தெரிய வரும் என்றார்.

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் மாவோயிஸ்ட் தீபக் (32). கேரள மாநில வனப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோயிஸ்ட்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். இவரை, கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த நவம்பர் 9ம் தேதி சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். பின்னர், சட்டீஸ்கர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபக் தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர். இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை வந்து தீபக் கைதான இடத்தை பார்வையிட்டனர். கைது செய்த அதிகாரிகளிடம் தீபக் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top