குமரியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 3 போலீஸ் நிலையங்கள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மூடப்பட்டன. மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது. கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் நிலவரப்படி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா பரிசோதனை மையம், தனியார் கொரோனா பரிசோதனை மையம் ஆகியவற்றில் 157 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 885 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 66 வயது மூதாட்டியும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளியான கொரோனா பாதிப்பு பட்டியலில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவரும் இடம் பெற்றுள்ளார். இவருடைய சொந்த ஊர் மார்த்தாண்டம். அவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.கோட்டார் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு கிருமி நாசினி தெளித்து தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அவர் பணியாற்றிய கோட்டார் போலீஸ் நிலையத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன் போலீஸ் நிலையமும் மூடப்பட்டது.
நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலைய பகுதியில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருடைய வீட்டிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவர் அடிக்கடி சென்று வந்த நேசமணிநகர் போலீஸ் நிலையம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மதுவிலக்கு அமல்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் செயல்படும் தொழிலாளர் ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ.) மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும், மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றும் பெண் தூய்மை பணியாளரும், ஒரு ஊழியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு வங்கி கிளையில் பணியாற்றும் ஒரு ஊழியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் வங்கி, வெட்டூர்ணிமடம் வங்கி கிளை ஆகியவற்றில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சமையல் பெண் ஊழியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள சமையல் கூடத்திலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், பூதப்பாண்டி போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, காவலர் குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையில் சுகாதார பணியாளர் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.
மேலும், பூதப்பாண்டியில் மெக்கானிக், அவரது மனைவி, மகள் மற்றும் ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு கொரோனா தொற்று குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் குமரி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
0 Comments