கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி லட்சுமிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இதில், ஈத்தாமொழி அருகே ஆடராவிளையை சேர்ந்த சுதன்(வயது 32) என்பதும், குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சுதனை கைது செய்து அவரிடம் இருந்து 40 பவுன் நகைகளை மீட்டனர்.
இதற்கிடையே சுதன், கொள்ளையடித்தது ஏன்? கொள்ளையடித்த நகைகளை என்ன செய்தார்? என்பது தொடர்பான விசாரணையில் ருசிகர தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக சுதன் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-எனக்கு பணம் வைத்து சூதாடுவதில் (சீட்டு விளையாட்டு) அதிக ஆர்வம் உண்டு. நான் அடிக்கடி பல இடங்களுக்கு சென்று சீட்டு விளையாடுவேன். இதில் பலமுறை தோல்வி அடைந்து பணத்தை இழந்தேன். நண்பர்களிடம் கடன் வாங்கியும் சீட்டு விளையாடி தோற்றுள்ளேன். கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால், பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டேன்.பணம் கொடுக்க முடியாததால் திருட தொடங்கினேன். முதலில் மாட்டிக்கொள்ளவில்லை. இதனால், தொடர்ந்து திருட தொடங்கினேன். அவ்வாறு திருடிய நகைகளை விற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதையும் இழந்தேன். இந்தநிலையில் தான் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கி கொண்டேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
0 Comments