குமரியில் போராட்டத்தில் கைதான 40 ஆசிரியர்களை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு!

குமரியில் போராட்டத்தில் கைதான 40 ஆசிரியர்களை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு!

in News / Local

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குமரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று 6-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாலைமறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அதாவது கடந்த 25-ந் தேதி 6 பேர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 40 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஒரு நபருக்கு 2 பேர் என 40 பேருக்கும் 80 பேர் ஜாமீன் கொடுக்க கோர்ட்டு கூறியது. ஆனால் ஜாமீன் கொடுக்க யாரும் முன்வராததால் 40 ஆசிரியர்களையும் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 6 பேரும் நேற்று 2-வது நாளாக கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

இந்தநிலையில் நேற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் சிவஸ்ரீ ரமேஷ், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுச்செயலாளர் பாலச்சந்தர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கனகராஜ், ஆதித்தன், பிரதீஷ்குமார் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். இசக்கியப்பன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

வழக்கம்போல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடலாம் என நினைத்து கலெக்டர் அலுவலக பகுதியில் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். மறியலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் ஏராளமான அரசு பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடாததால் மதியத்துக்கு பிறகு அந்த வாகனங்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் குறைவான அளவில்தான் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றனர். தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து நேற்று பள்ளிகளுக்கு பெருமளவு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்ட கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரிய- ஆசிரியைகளின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 383 ஆகும். அதில் நேற்று 1,180 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. அதாவது 14 சதவீதம் பேர் மட்டும் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் குவிந்தனர். மதியத்துக்குப்பிறகு அவர்களின் கூட்டம் குறைந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top