டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருடிய 16 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது

டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருடிய 16 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது

in News / Local

நாகர்கோவில் டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் திருடிய அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் பார்வதிபுரம் நாடாங்குளத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை சுவரில் துளை போட்டு 63 மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதே மதுக்கடையில் இதற்கு முன்பு 4 முறை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். பல கோணங்களில் விசாரித்தும் எந்த முக்கிய தகவலும் கிடைக்காததால் மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

5-வது திருட்டு சம்பவத்திற்கு பிறகு மர்ம நபர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மதுக்கடையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றிய விவரங்கள் போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மர்ம நபர்களை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து திருட்டில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து 5 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிடிபட்டவர்கள் ஆலம்பாறை அழகர்கோணத்தை சேர்ந்த சங்கர் (வயது 25), இவருடைய சகோதரர் கிருஷ்ணன் என்ற கிச்சு (18), தங்கதுரை (28), மணிவண்ணன் (23) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் கூட்டாக சேர்ந்து மதுபாட்டில்களை திருடி வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மதுக்கடையில் திருடிய அனைத்து மதுபானங்களையும் தாங்களே அருந்தி உள்ளனர். மதுக்கடையில் திருடச் செல்லும் இவர்கள் பெரும்பாலும் சுவரில் துளை போட்டே மதுபானங்களை அள்ளிச் சென்றுள்ளனர். அதாவது சங்கர் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சுவரில் துளை போடும் வேலையை செய்வார்கள். 16 வயது சிறுவன், அந்த துளை வழியாக கடைக்குள் சென்று மதுபாட்டில்களை திருடியுள்ளான்.

இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் சங்கர் மீது ஏற்கனவே கோட்டார் மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் தங்கதுரை மீது நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் ஆடு திருட்டு வழக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top