குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்

in News / Local

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் கடந்த 9-ந் தேதி முதல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புபவர்கள் மனுக்கள் தாக்கல் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றதால் வேட்பு மனு தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியதையடுத்து
தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதையடுத்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி அலுவலகங்களிலும் ஏராளமானோர் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 44 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 85 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 399 பேரும் ஆக மொத்தம் 531 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதேவேளையில் கடந்த 3 நாட்களில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 520 பேர் தாக்கல் செய்திருந்தனர். இதனால் தற்போது வரை 1051 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் (வெள்ளிக்கிழமை) ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று காலை வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது . பயிற்சி முகாமுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்? வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னும், வாக்குப்பதிவு முடிந்த பிறகும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top