மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

in News / Local

ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15–ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 15–ந் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நேற்று நள்ளிரவு முதல் 60 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. இந்த காலக்கட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை உள்ள மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350–க்கும் மேற்பட்ட விசைப்படகு மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்

தடைகாலத்தையொட்டி நேற்று காலை முதல் சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்களின் விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தடைகாலம் முடியும் வரை விலை உயர்ந்த மீன்களான நெய் மீன், நவரை, பாறை, விளமீன் போன்றவை கிடைக்காது. வள்ளம், கட்டுமரம் மூலம் மீன்பிடிக்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் என்பதால் நெத்தலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் மட்டுமே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். இதனால், மீன்கள் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

இந்த தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை படகு கட்டும் தளத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். படகுகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெறும். வலைகள் பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top