கேரளாவுக்கு கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கேரளாவுக்கு கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

in News / Local

தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மினி டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு அஜய்குமார் மற்றும் போலீசார் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்ட பதிவு எண் கொண்ட ஒரு மினி டெம்போ வந்தது.

அதனை போலீசார் வழிமறித்து நிறுத்தினர். அதில் கழிவு அட்டைகள் இருந்தது. போலீசார் அந்த கழிவு அட்டைகளை அகற்ற சொல்லி சோதனை செய்தபோது அதற்குள் 15 சிறு, சிறு சாக்கு மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சாக்கு மூடைகளை அவிழ்த்து பார்த்தபோது அதற்குள் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு மூடையிலும் தலா 50 கிலோ வீதம் 15 மூடைகளிலும் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திய மினி டெம்போ டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமாரையும் (வயது 27), டெம்போ உரிமையாளரான தூத்துக்குடி மடத்தூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற மாரிச்செல்வத்தையும் (30) போலீசார் கைது செய்தனர். மினி டெம்போவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top