காளிகேசத்தில் இருந்து ரப்பர் தடிகளை ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருவட்டார் பகுதியில் வந்த போது அளவுக்கதிகமான பாரத்துடன் அங்கும் இங்கும் கட்டுபாடின்றி சென்றது. இதை கண்ட ரோந்து போலீசார் திருவட்டார் பாலம் அருகில் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். போலீசாரும் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர்.
உடனே, லாரி டிரைவர் லாரியை ஆற்றூரில் இருந்து அழகியமண்டபம் நோக்கி வேகமாக ஓட்டினார். தாறுமாறாக ஓடிய லாரி வீயன்னூர், துணை மின் நிலையம் அருகில் நிழற்குடை மீதும், மின்கம்பங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிழற்குடை இடிந்தது. மேலும், 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
இறுதியில் போலீசார் வேர்கிளம்பி சந்திப்பில் வைத்து லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது, லாரி டிரைவர் போதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக அயக்கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் ஜெபராஜ் (வயது 36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments