கீழ்குழத்தில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்!

கீழ்குழத்தில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்!

in News / Local

கருங்கல் அருகே கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட குமரிநகர் பகுதியில் வண்ணான்குளம் உள்ளது. இந்த குளத்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று வந்தது. மேலும் இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு நிலத்தடி நீரை பாதுகாக்கும் முக்கிய குளமாகவும் உள்ளது. ஆனால் இக்குளம் தற்போது ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி நீர் பிடிப்பு பகுதி குறைந்துள்ளது. அதோடு குளத்தை தூர்வாராததால் போதுமான தண்ணீர் தேக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த குளத்தை நம்பி உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

எனவே குளத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினர் வந்து பார்வையிட்டு குளத்தை அளவீடு செய்து ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளை குறித்து வைத்தனர். உடனடியாக ஆக்ரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தனர். ஆனால் அளவீடு பணி முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இதுவரை ஆக்ரமிப்புகள் அகற்றப்படவில்லை. குளமும் தூர்வாரப்படவில்லை .

தற்போது பெய்து வரும் பருவமழை விரை வில் முடிவுக்கு வரும் என்பதால் அதற்குள் குளத்தை தூர்வாரி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கிவைத்தால் கோடை காலத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும், மேலும் நிலத்தடி நீரும் குறையாமல் பாதுகாக்க முடியும். எனவே ஆக்ரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன் கிள்ளியூர் தாசில்தார் கோலப்பனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top