சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது - சுங்கத்துறை விளக்கம்

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது - சுங்கத்துறை விளக்கம்

in News / Local

லெபனான் நாட்டில் 100க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய வெடிவிபத்துக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட், சுமார் 740 மெட்ரிக் டன் அளவுக்கு சென்னை மணலியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வேதிப் பொருள் பாதுகாப்பாக இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம் நடைபெற்ற வெடிவிபத்தில் இதுவரை 138 பேர் பலியாகியுள்ளனர். 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 2, 750 டன் அம்மோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையிலும் அதே அம்மோனியம் நைட்ரேட் சுமார் 740 மெட்ரிக் டன் அளவிற்கு 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் எனும் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உரிய அனுமதி பெறாமல் வேதிப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டதை உறுதி செய்து வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் வேதிப்பொருளை ஏலம் மூலம் அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டது.

அதன்பிறகு 8 மாதங்கள் ஆன பிறகு, இன்னும் 37 கண்டெய்னர்களில் அமோனியம் நைட்ரேட் சுங்கத்துறைக்கு சொந்தமான யார்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.இதனால் சென்னையிலும் லெபனானை போன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்துக்கு வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்தது. இதையடுத்து அம்மன் கெமிக்கல் நிறுவன நிர்வாகி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சென்னை துறைமுகம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறைக்கு சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதனை சுற்றி குடியிருப்புகள் எதுவும் இல்லை என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் சுங்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வேதிப்பொருள் தற்போது நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி இ-ஆக்சன்((e-auction)) முறையில், வேதிப்பொருளை ஏலம் விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top