நாகர்கோவிலில் மீண்டும் பரபரப்பு: காசியின் மற்றொரு நண்பர் அதிரடி கைது

நாகர்கோவிலில் மீண்டும் பரபரப்பு: காசியின் மற்றொரு நண்பர் அதிரடி கைது

in News / Local

சென்னை பெண் டாக்டர் உள்பட பல பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி காசி பணம் பறித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான காசி, அவருடைய நண்பர் டேசன் ஜினோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.சி. ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகின.

தற்போது இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக காசியின் நெருங்கிய நண்பரான நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தினேஷ் (வயது 24) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர். டேசன் ஜினோவிடம் நடத்திய விசாரணையில் தினேஷ் பற்றிய விவரங்கள் தெரிய வந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

காசியின் சதி வலை தெரிந்ததும் அவரின் தொடர்பை பெண்கள் துண்டித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்களின் செல்போன் நம்பரை காசி அவருடைய நண்பர் தினேசுக்கு அனுப்பி இருக்கிறார். பின்னர் அந்த பெண்களை தினேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். மேலும் காசியிடம் பேசவில்லை என்றால் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இந்த மிரட்டலுக்கு பயந்து சில பெண்கள் காசியின் தொடர்பை துண்டிக்க முடியாமல் தவித்தனர். மேலும் காசியுடன் இருந்த தொடர்பை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். இது மட்டுமின்றி காசி பழகி வந்த பல பெண்களை தினேஷ் தனியாக மிரட்டி இருக்கிறார்.

அதாவது, பெண்களிடம் ‘உங்கள் ஆபாச வீடியோ என்னிடம் இருக்கிறது. எனது விருப்பத்திற்கு சம்மதிக்காவிட்டால் அதை வெளியிடுவேன்’ என மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்தும் தினேசின் ஆசைக்கு சில பெண்கள் சம்மதித்து உள்ளனர். இதுவும் தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதோடு காசி தொடர்பாக புகார் அளிக்க நினைத்த ஒரு இளம்பெண்ணை காசி, தினேஷ் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து கடத்தி சென்று அவரது செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தினேசை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் காசி, அவரது நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் என மொத்தம் 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபோல காசியின் கூட்டாளிகள் இன்னும் சிலர் பெண்களை மிரட்டி உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இதனால் காசி விவகாரம் நாகர்கோவிலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top