குளச்சல் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் சிக்கியது!

குளச்சல் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் சிக்கியது!

in News / Local

குளச்சல் மெயின் ரோடு, வெள்ளங்கட்டி பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த கல்வி அலுவலகத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 61 பள்ளிகள் உள்ளன. இங்கு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புத்தகம் வினியோகம் செய்ய முறைகேடாக பணம் பெற்றுக்கொள்வதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெஞ்சமின், சிவசங்கர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு குளச்சல் வட்டார கல்வி அலுவலத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.

இந்த சோதனையில் கல்வி அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூ. 54 ஆயிரத்து 60 இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த பணம் குறித்து போலீசார் வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், ஊழியர் விஜயா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து கணக்கில் வராத ரூ.54 ஆயிரத்து 60 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சில ஆவணங்களையும் போலீசார் எடுத்து சென்றனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குளச்சல் வட்டார கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top