ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!

in News / Local

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரின் 1½ வயது குழந்தைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பிரசவ வார்டு அமைந்துள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அந்த குழந்தையின் தாயாருக்கு உதவி செய்வதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த வடமாநில பெண் ஒருவரும் உடன் இருந்தார். அவர் தனது 10 வயது சிறுமியையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் தாயாரும், உதவிக்கு வந்த பெண் மற்றும் அவருடைய 10 வயது சிறுமியும் முதல் மாடியின் வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களுடன் பிற நோயாளிகளின் உறவினர்களும், உதவியாளர்களும் அதே வராண்டாவில் தூங்கினர்.

இந்தநிலையில் நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் 10 வயது சிறுமியிடம், அங்கு காவலாளியாக வேலை செய்து வரும் நேசமணி நகர் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (வயது 24) என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே அந்தசிறுமி எழுந்து சத்தம்போட்டு அழுததோடு, காவலாளி தனது உடையை அவிழ்க்க முயன்றதாக தாயாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாயாரும், சிகிச்சை பெறும் குழந்தையின் தாயாரும் எழுந்து அவரை சத்தம்போட்டு திட்டியதோடு, அடித்து உதைத்தனர். அப்போது சுபின் அந்த பெண்களை மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த பிற நோயாளிகளின் உறவினர்களும் சத்தம் கேட்டு எழுந்தனர். அவர்கள் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அவர்களும் காவலாளி சுபினை திட்டினார்கள். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் காவலாளி சுபினை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வேறு வார்டில் காவலாளியாக நேற்று பணியில் இருந்த சுபின் பிரசவ வார்டின் முதல் மாடிக்கு வந்து சிறுமியிடம் சில்மிஷம் செய்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் நேற்று காலை ஆசாரிபள்ளம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீயாய் பரவியதோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காவலாளியை பணிக்கு அமர்த்திய தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கும், ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் காவலாளி சுபினை அழைத்து விசாரணை செய்தார். இதில் அவர் 10 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து தங்களது ஒப்பந்த நிறுவனத்துக்கும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கும் கடிதம் அனுப்பினார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா, ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு வந்து சிறுமியின் தாயார் மற்றும் குழந்தையிடம் விசாரணை நடத்தினார். குழந்தைக்கு தமிழ் தெரியாததால் இந்தி தெரிந்தவர் மூலம் விசாரணை மேற்கொண்டார். அப்போது காவலாளி சுபின் அந்த குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவலாளியை பணிக்கு அமர்த்திய ஒப்பந்த நிறுவன மேலாளரிடம் விசாரித்தார். அப்போது அவர் சம்பந்தப்பட்ட காவலாளியை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top