விபத்தை ஏற்படுத்தி நகை பறிக்க முயற்சி - தாய் ,மகள் படுகாயம்!

விபத்தை ஏற்படுத்தி நகை பறிக்க முயற்சி - தாய் ,மகள் படுகாயம்!

in News / Local

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜான் (வயது 44). இவருடைய மனைவி லிபின் கிரீன் ரோஸ் (42). இவர்களுக்கு ஒரு மகனும், ஜிஷா (16) என்ற மகளும் உள்ளனர். லிபின் கிரீன் ரோஸ் அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். எட்வின் ஜான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருவதால், லிபின் கிரீன்ரோஸ் தனது மகன், மகளுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு லிபின் கிரீன் ரோஸ் தனது மகளுடன் ஸ்கூட்டரில் நெல்லிக்காவிளைக்கு சென்று அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர், ஓச்சவிளையில் உள்ள தனது தாயார் வீடு நோக்கி புறப்பட்டார்.

பண்டாரபரம்பு பகுதியில் சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர் .அவர்கள், திடீரென லிபின் கிரீன் ரோஸ் வந்த ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிளால் மோதினர். இதில் நிலைதடுமாறிய லிபின் கிரீன் ரோசும் அவருடைய மகளும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஏதோ விபத்து தான் நடந்து விட்டது என லிபின் கிரீன் ரோஸ் நினைத்தார். ஆனால், கீழே விழுந்த அவரை தாக்கி மர்ம நபர்கள் 16 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது தான் இது விபத்து இல்லை, இருவரும் வழிப்பறி கொள்ளையர்கள் என சுதாரித்து கொண்டார்.

நகையை பறிக்க விடாமல் கொள்ளையர்களுடன் போராடினார். அவருக்கு உறுதுணையாக மகளும் செயல்பட்டார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கவனித்த கொள்ளையர்கள், நகையை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் லிபின் கிரீன் ரோஸ் மயங்கினார்.

உடனே பொதுமக்கள் தாய், மகள் இருவரையும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, கொள்ளையர்கள் தாக்கியதில் லிபின் கிரீன் ரோஸ் சுயநினைவு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. உடனே, டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்ததை தொடர்ந்து நினைவு திரும்பியது. அங்கு அவருக்கும், மகள் ஜிஷாவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், நகை பறிக்க முயன்ற சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் வழிப்பறி கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்கள் தாக்கியதில் மகளுடன் ஆசிரியை படுகாயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top