நாகர்கோவிலில் அரசு, தனியார் பஸ்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

நாகர்கோவிலில் அரசு, தனியார் பஸ்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

in News / Local

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி நாகர்கோவிலில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து அண்டை மாவட்டமான குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவல் தற்போது தொடங்கியுள்ளது. எனவே கேரளாவில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளை, காக்கவிளை, பளுகல் ஆகிய பகுதிகளில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் இருந்து வருபவர்கள் இந்த பரிசோதனை மையங்களில் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் தக்கலை மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிகிறார்களா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் முறையாக முக கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா? என்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் முக கவசம் அணியாமல் பஸ்சை இயக்கியது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவர்களுக்கு முக கவசத்தையும் அதிகாரிகள் வழங்கினர். இதுபோல் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூரில் ஒரு பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

குமரி மாவட்டத்தில் தற்போது 487 பள்ளிகளில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இவர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். யாருக்காவது காய்ச்சல் இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top