பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேரளாவில் அவமதிப்பு? குமரியில் பிஜேபி போராட்டம்

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேரளாவில் அவமதிப்பு? குமரியில் பிஜேபி போராட்டம்

in News / Local

கேரள மாநிலம் சபரிமலை சென்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை, கேரள போலீசார் அவமதித்ததாகக் கூறி, பாஜகவினர் நடத்தும் மறியல் போராட்டத்தால் தமிழக கேரள எல்லையில் அரசுப் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் நிலக்கல் பகுதியில், இருந்து பம்பைக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சென்ற வாகனங்களை அம்மாவட்ட எஸ்.பி யதீஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். பம்பைக்குத் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை எனவும், மத்திய இணை அமைச்சர் விஐபி என்பதால் அவரது வாகனத்தை மட்டுமே அனுமதிப்பதாகவும் எஸ்.பி. கூறினார்.

மண் சரிவு உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் அனைத்து தனியார் வாகனங்களையும் அனுமதிக்க இயலாத நிலையில் உள்ளதாகவும் எஸ்.பி தெரிவித்தார். ஆனால் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கும் போது தனியார் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று எஸ்.பியிடம் வலியுறுத்தினார். அப்படி உத்தரவு பிறப்பித்தால் தான் அனுமதிப்பதாக எஸ்.பி தெரிவித்தார்.

இந்த வார்த்தை மத்திய அமைச்சரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கேரள மாநில பா.ஜ.க நிர்வாகிகள் எஸ்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் கேரள அரசுப் பேருந்திலேயே பம்பை வரை பயணித்தார். இதன் பிறகு சன்னிதானத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபோது, பொன்.ராதாகிருஷ்ணன் கண்ணீர் விட்டு அழுதார்.

இதேபோன்று, இரவு சபரிமலை தரிசனம் முடித்து பொன்ராதாகிருஷ்ணன் திரும்பி வந்து கொண்டு இருக்கும் போதும், அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் என்று தெரிந்தவுடன் அவரிடம் மன்னிப்பு கேட்டு கேரள போலீசார் கடிதம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து கேரள போலீசார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கூறி பா.ஜ.கவினர் கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தக்கலை, களியக்காவிளை பகுதியில் பாஜகவினர் கேரள அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பேருந்துகளும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் எல்லை பகுதியுடன் நிறுத்தப்பட்டன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top