ராஜாக்கமங்கலம் அருகே டெம்போ மோதி அரசு பஸ் கண்டக்டர் சாவு!

ராஜாக்கமங்கலம் அருகே டெம்போ மோதி அரசு பஸ் கண்டக்டர் சாவு!

in News / Local

ராஜாக்கமங்கலம் அருகே அம்மாண்டிவிளை கட்டகாடு பகுதியை சேர்ந்தவர் விஜயரகுநாத் (வயது 32). இவர், நாகர்கோவிலில் செட்டிகுளத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கல்பனா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர், பாம்பன்விளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஓன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயரகுநாத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்..

இதுகுறித்து விஜயரகுநாத்தின் தந்தை அர்ஜூன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவை பறிமுதல் செய்தனர். பின்னர் டெம்போ டிரைவரான முத்தலக்குறிச்சி பகுதியை ேசர்ந்த அய்யப்பன் (38) என்பவரை கைது செய்தனர்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளம் தோண்டப்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி பலியாகும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

எனவே, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top