ஆபாசப்பட விவகாரம்: என் மகன் மீது பொய்வழக்கு - விசாரணை நடத்த காசியின் தந்தை கோரிக்கை

ஆபாசப்பட விவகாரம்: என் மகன் மீது பொய்வழக்கு - விசாரணை நடத்த காசியின் தந்தை கோரிக்கை

in News / Local

பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அவரை என்கவுண்டர் செய்ய போலீசார் முயற்சி செய்து வருவதாகவும், இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசியின் தந்தை தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் காசி மீது ஏற்கனவே இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர் மீது பெண்கள் புகார் அளித்து வரும் நிலையில் சிறையிலிருந்த காசியை நேற்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக காசியின் தந்தை தங்கபாண்டியன் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்று அளித்துள்ளார் அதில் காசி மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,அவனை என்கவுண்டர் செய்ய போலீசார் முயற்சி செய்து வருவதாகவும், இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தான் வசித்து வரும் வீடு முறையான அனுமதி பெற்று கட்டி உள்ளதாகவும் அதனை ஜப்தி செய்யும் நோக்கில் நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று நாகர்கோவில் காசி விவகாரம். பள்ளி மாணவிகள் தொடங்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அன்பாக பழகி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஏமாற்றி வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த காசி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). இவர் இன்ஜினீயரிங் படித்துள்ளார். காசியின் தந்தை, அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்தார்.இறைச்சி வியாபாரம் முடிந்த பின்பு சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார்.

பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்கில் இருப்பது போன்ற போட்டோக்கள், வீடியோக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் பலர் காசியை காதலித்துள்ளனர். அந்த பெண்களை மயக்கும் விதமாக காசி அவ்வப்போது போட்டோக்கள், டிக் டாக் வீடியோக்கள் என பதிவிட்டு வந்துள்ளார். இவர் இளம்பெண்களுடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை ஆபாச வீடியோவாக பதிவு செய்து பணம் சம்பாதித்துள்ளார்.

இதே போல் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் பணிபுரிந்த பெண் மருத்துவரிடம் பழகி அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது மருத்துவர் அளித்த புகாரில் கைதாகி நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காசியின் பள்ளி தோழி ஒருவர் விமான பணிப்பெண்ணாக உள்ளார். இருவரும் நாகர்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்துள்ளனர். சென்னையில் விமான பணிப்பெண்ணுக்கான படிப்பில் இருந்தபோது மீண்டும் காசியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை தனக்கு சாதகமாக்கிய காசி, அப்பெண் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பதை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளார் காசி.

ஒரு நாள் திடீரென தனது அம்மாவுக்கு புற்றுநோய் உள்ளதாகவும்; அதற்கு மருந்து வாங்க வேண்டும் என்று 1.50 லட்சம் பணமும், 16 கிராம் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். அதே போன்று பல காரணங்களைச் சொல்லி அடிக்கடி அந்த பெண்ணிடம் பணம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் காசி அந்த பெண்ணுக்கு போன் செய்வதை நிறுத்தி கொண்டதுடன் அவருடைய தொடர்பையும் தவிர்த்து வந்துள்ளார்.

காசியால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், காசியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.பணத்தை திருப்பிக்கேட்டால்,நாம் இருவரும் இருந்த அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து செய்வதறியாது தவித்த அந்த பெண், தற்போது காசி காவல்துறையினரிடம் சிக்கியது தெரிந்ததும் காசி மீது புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். டாக்டரின் கருத்துக்கு எதிராக கருத்து விடியோ பதிவு செய்து வந்துள்ளார்

காசி.இவ்வாறு தனக்கு எதிராக கருத்து சொன்ன பெண் மருத்துவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அந்த மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதை காசி படம் எடுத்துள்ளார்.தனது குடும்ப உறுப்பினருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக பெண் மருத்துவரிடமிருந்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் என ஆறரை லட்சம் ரூபாய் வரை காசி பெற்றுள்ளார்.

ஒரு முறை இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது காசியின் செல்போனை பெண் மருத்துவர் எடுத்து பார்த்துள்ளார். அப்போது காசி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் செல்போனில் இருந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் டாக்டர், காசியிடம் இருந்து விலகத் தொடங்கினார்.

ஆத்திரமடைந்த காசி, தினசரி பெண் மருத்துவரை பணம் கேட்டு அதிகமாக தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

பெண் மருத்துவர் பணம் தர மறுத்ததையடுத்து பணம் தராவிட்டால் இருவரும் தனிமையில் இருந்த அந்தரங்கப் படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் பெண் டாக்டர் எந்த மிரட்டலுக்கும் பயப்படவில்லை எனவே, கடந்த புதன்கிழமை காசி தனது போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் பெண் மருத்துவர், கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்த போது ரகசிய கேமராவில் எடுத்த அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர், உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்யிடம் ஆன்லைனில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காசியிடம் நடத்திய விசாரணையில் பெண் டாக்டரை மிரட்டியதை போன்று பணத்திற்காக பல பெண்களை மிரட்டி ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து காசி மீது நாகர்கோவிலில் உள்ள இரு காவல்நிலையங்களில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காசியை சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களை காசி,ஏமாற்றியது தெரிய வந்தது. இந்த குற்றங்களை காசி ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பு இல்லை என போலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காசியுடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் சிலரிடம் போலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோக்கள் மற்றும் வீடியோவில் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் மட்டுமின்றி, அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களையும் விசாரித்து வாக்குமூலம் பெற தனி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டது போல், காசி தலைமையில் நாகர்கோவிலிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக விசாரணை நடத்தி வரும் தனி பிரிவு போலிசார் தெரிவித்தனர்.

குமரியில் நடந்த இச்சம்பவம் குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் லீமா ரோஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில் "இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் குமரி மாதர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் ஆன்லைனில் மனு அளித்தோம்".

"சென்னையில் உள்ள மாதர் சங்கம் சார்பில் சென்னை காவல் உயர் அதிகாரிகளிடமும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாதர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.". என்றார் லீமா ரோஸ்.

"இந்த வழக்கில் இதுவரை ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார் ஆனால் அவர் மட்டும் இதை தனியாக செய்திருக்கவாய்ப்பு இல்லை.

இவனுக்கு பின்னால் அரசியல்வாதிகள், பணம்படைத்தவர்கள் இருக்க அதிக வாய்ப்பு உண்டு.எனவே அவனுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

'இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை, பெங்களூர்,குமரி என தமிழகம் உட்பட வெளி மாநிலங்களிலும் உள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார்.

'குமரியில் நடந்துள்ள இந்த சம்பவம் பொள்ளாச்சியை விட மிக மோசமானது இதில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பெயர் வெளியே வராத அளவு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்'.

'தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எவரும் இம்மாதிரியான குற்றங்களை செய்யாமலிருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்கிறார் லீமா ரோஸ்.

இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'பல பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் காசி கைது செய்யபட்டுள்ளார். காசி குறித்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது'.

அவர் மேலும் கூறியதாவது, 'காசியிடம் இருந்து கைபற்றப்பட்ட லேப்டாப்,ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ்,மொபைல் போன,சிடி ஆகியவற்றை மாவட்ட காவல் சைபர் கிரைம் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 50க்கும் அதிகமான வீடியோக்கள் கண்டுபிக்கப்ட்டுள்ளது.

'காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணுடைய மொபைல் எண்ணான 94981 11103 க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.

மேலும் அவர் பேசுகையில் 'சமூக வலைதளங்களில் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் தெரியாத நபர்களிடம் ONLINE CHAT செய்ய வேண்டாம்'. 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் பதிவு செய்யும் புகைபடங்கள்,வீடியோக்களுக்கு லைக் போடும் போது கவனமாக இருக்க வேண்டும்.'

'காசி போன்ற நபர்கள் பெண்களை குறிவைத்து ஏமாற்றி வருகின்றனர் இப்படியான நபர்கள் பெண்களை தொடர்பு கொண்டு மிரட்டினால் தைரியமாக காவல்துறையிடம் புகார் கொடுங்கள் அல்லது நம்பிக்கையானவர்களிடம் தெரிய படுத்துங்கள்'.

'பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்;கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்'குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழ் காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தது ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அவர்கள் தரப்பு இது குறித்து விளக்கம் அளித்தவுடன், அந்த விளக்கம் பிரசுரிக்கப்படும.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top