குமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றுவது மத்திய அரசின் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன்!

குமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றுவது மத்திய அரசின் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன்!

in News / Local

தமிழகத்தில் வனப்பகுதிகளில் போதிய அளவில் தண்ணீர் மற்றும் தீவனம் இல்லாத காரணத்தால் வன விலங்குகள் மக்கள் நடமாடும் பகுதிக்கு வருகின்றன. எனவே இதை தடுக்க வன பகுதிகளில் விலங்குகளுக்கு தேவையான தீவனங்களை பயிரிடவும், தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார். தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் மேலும் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனில் அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை பணியாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு பணியாற்றி இருந்தால் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வனத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப 1,172 பேர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்ட வன பகுதிகளில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும், வன விலங்குகள் கொல்லப்படுவதாகவும் கூறுகிறீர்கள். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. எனினும் ஆதாரங்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கீரிப்பாறை பகுதியில் நடப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான ரப்பர் மரங்கள் நாசமாகிவிட்டதாக கூறுகிறீர்கள். வறட்சி மற்றும் மழை இல்லாமை காரணமாக அந்த மரங்கள் அழிந்துவிட்டன. அதற்கு பதிலாக வேறு மரங்கள் நடப்பட்டு அதற்கு தேவையான தண்ணீர் லாரிகள் மூலமாக வழங்கப்படும்.

குமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றுவது மத்திய அரசின் முடிவாகும். கொடைக்கானலையும் யானைகள் சரணாலயமாக கொண்டு வந்து இருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசின் கடமை. ஆனால் மக்களுக்கு பாதிப்புகள் இருந்தால் அதை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகிறோம்.

குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் தரமில்லாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் 8 ஆயிரம் ரூபாய் தான் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் ஒத்துழைப்பு இல்லாமை தொடர்பாக இருதரப்பினரிடமும் பேசியுள்ளோம். குலசேகரத்தில் சோதனை சாவடி நகர் பகுதியில் இருப்பதால், அந்த சாவடி அகற்றப்பட்டது. தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் நிலம் விற்க விலக்கு அளிக்கப்பட்ட பிறகு 560 மனுக்கள் வந்தன. அதில் 160 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் 3 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. ஒகி புயல் மற்றும் கஜா புயலில் வனப்பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்ற 100 கோடி ரூபாய் தேவைப்படும். எனவே நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையினருடன் கலந்தாலோசித்து பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top