பட்டப்பகலில் துணிகரம், மோட்டார் சைக்கிளில் வந்து ராணுவ வீரர் மனைவியிடம் 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி!

பட்டப்பகலில் துணிகரம், மோட்டார் சைக்கிளில் வந்து ராணுவ வீரர் மனைவியிடம் 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி!

in News / Local

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு கடமக்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 37). ராணுவ வீரரான இவர் தற்போது ராஜஸ்தானில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனிதா(33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் தனது 2-வது மகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க விரும்பினார் அனிதா . இதற்காக நேற்று காலை அனிதா தனது மகள்களை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் மார்த்தாண்டத்துக்கு வந்தார்.

பின்னர், பள்ளியில் மகளை சேர்த்து விட்டு ,ஸ்கூட்டரில் கடமக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த அனிதாவை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார். பாகோடு கப்பத்தான்விளை பகுதியில் சென்றபோது, அந்த ஆசாமி திடீரென வந்து ஸ்கூட்டரில் மோதுவது போல் அனிதா அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா ‘திருடன்... திருடன்...’ என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த ஆசாமி, மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர், இதுபற்றி அனிதா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பட்டப்பகலில் துணிகரமாக கைவரிசை காட்டிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top