இரணியல் அருகே அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர்மீது மிளகாய்பொடி தூவி 10½ பவுன் நகை பறிப்பு!

இரணியல் அருகே அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர்மீது மிளகாய்பொடி தூவி 10½ பவுன் நகை பறிப்பு!

in News / Local

இரணியல் அருகே காரங்காடு கடுவான்விளை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 40). இவருடைய மனைவி அனிதா குமாரி (33). இவர், குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

சுதாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், அனிதா குமாரி மகனுடன் வசித்து வந்தார். இவர், தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று விட்டு இரவு பேயன்குழியில் இறங்கி வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு அனிதா குமாரி வழக்கம் போல் வேலை முடிந்து பஸ் ஏறி பேயன்குழி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் கடுவான்விளை செல்லும் சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். மணக்காவிளையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 2 மர்ம நபர்கள் புதர் மறைவில் இருந்து திடீரென பாய்ந்து வந்தனர். அவர்களை கண்டதும் அனிதா குமாரி அதிர்ச்சி அடைந்தார். சுதாரிப்பதற்குள், மர்ம நபர்கள் அனிதா குமாரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கீழே தள்ளினர். இதில், கண் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் அலறினார். இதை பயன்படுத்தி அந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10½ பவுன் தங்க நகையை பறித்தனர். இதற்கிடையே அனிதா குமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்து அனிதா குமாரி இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் மீது மிளகாய்பொடி தூவி நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top