நாய்களின் ஓய்வறையான படந்தாலுமூடு சோதனை சாவடி. செயல்படாத காரணத்தால் கடத்தல்காரர்கள் உற்சாகம்.

நாய்களின் ஓய்வறையான படந்தாலுமூடு சோதனை சாவடி. செயல்படாத காரணத்தால் கடத்தல்காரர்கள் உற்சாகம்.

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள படந்தாலுமூடு சோதனை சாவடி நாய்களின் ஓய்வறையாக மாறியுள்ளது. இதனால் கடத்தல் கும்பல் தடை இல்லாமல் செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம், கனிமவளம், மணல் கடத்தல் போன்றவை கடந்த பல ஆண்டுகளாக அதிக அளவில் நடந்து வந்தது. இதை தடுக்கும் வகையில் அப்போது பத்மநாபபுரம் ஆர்டிஓவாக இருந்த ஜோதிநிர்மலா கடும் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து காவல்துறை சார்பிலும் எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.

இது கொள்ளை கும்பலுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. ஆகவே மாவட்டத்தில் உள்ள முக்கிய குறுக்கு சாலைகள் வழியாக தங்களது கடத்தல் சம்பவத்தை கும்பல் அரங்கேற்ற தொடங்கியது. இதற்கும் செக் வைக்க மாவட்ட போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சில வருடங்களுக்கு முன்பு தக்கலை சரக பகுதியான களியக்காவிளை, அருமனை, பளுகல், ஆறுகாணி, கடையாலுமூடு ஆகிய போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 33 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதே போல் குளச்சல் சரக பகுதிக்கு உள்பட்ட சூழால், நீரோடி, கொல்லங்கோடு, காக்காவிளை உள்பட 12 இடங்கள் என்று மொத்தம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது.

குறிப்பாக கன்னியாகுமரி – திருவனத்புரம் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளை, படந்தாலுமூடு, ஆரல்வாய்மொழி ஆகிய சோதனை சாவடிகளில் 24 மணிநேரமும் 4 பேர் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் பெருமளவில் கடத்தல் சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில மாதம் முன்பு களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ் எஸ் ஐ வில்சன் என்பவர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல், சாதாரண ஷெட்டுகளில் சோதனை சாவடிகள் இயங்குவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சோதனை சாவடிகள் நவீன மயமாக்கப் பட்டதுடன்,கடந்த சில தினங்கள் முன்பு அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயண் திறந்து வைத்தார். இதில் களியக்காவிளை சோதனை சாவடியும் சீரைக்கப்பட்டது.

ஆனால் அதன் அருகில் முக்கிய பகுதியான படந்தாலுமூடு சோதனை சாவடி கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனைச்சாவடி பழுதடைந்து, அதை புதுப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் நாய்களின் ஓய்வு இடமாக இருந்து வருகிறது .

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள படந்தாலுமூடு சோதனைச்சாவடி 24 மணி நேரமும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்துவந்தது. தற்போது படந்தாலுமூடு சோதனை சாவடி பூட்டியே கிடப்பதால் கடத்தல்காரர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படந்தாலுமூட்டுக்கும் காளியக்காவிளைக்கும் இடையில் பல குறுக்கு சாலைகள் வழியாக கடத்தல் கார்கள் பொருட்களை எந்த தடையும் இல்லாமல் கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் ,கடத்தி வருகின்றனர். குறிப்பாக குமரி மாவட்டத்தில் அதிக அளவில் சோதனை சாவடிகள் இருந்தும், தினமும் பல டன் கணக்கில் ரேஷன் அரிசிகள், மண்ணெண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி பெரும் கடத்தல் சம்பவங்களும் நடப்பதாக புகார்கள் உள்ளன. இதை தடுக்க இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top