கன்னியாகுமரியில் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைப்பது குறித்து ஆலோசனை!

கன்னியாகுமரியில் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைப்பது குறித்து ஆலோசனை!

in News / Local

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர், நமது கலாசாரம், உணவுகளை பெரிதும் விரும்புகின்றனர். அந்த வரிசையில், முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உள்ளூர் உணவுகளுக்கும் அவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு உள்ளது.

இவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக இந்த திட்டம் சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைப்பது மற்றும் உணவு வணிகங்களை நெறிமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன், வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்கசிவம், பிரவின்ரகு, சங்கர நாராயணன், கிளாட்சன், போஸ், குமார், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் மற்றும் வியாபாரிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடு முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள விதிகள் படி, நடமாடும் வணிகர்களுக்கு சுத்தமான உணவு தயாரித்தல், விற்பனை பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நடத்திய ஆய்வில் 62 சாலையோர உணவு விற்பனை வணிகர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தின் கீழ் கொண்டு வந்து, உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிமம் பெற்ற பொருட்களை வாங்கி, உணவுகளை தரம், சுத்தமாக தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும். மேலும் உணவுகளின் தரம் குறைவு, கலப்படம் குறித்து 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top