ஃபானி புயல் எச்சரிக்கை தொடர்ந்து, குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை!

ஃபானி புயல் எச்சரிக்கை தொடர்ந்து, குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை!

in News / Local

தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு சுமார் 18 கி.மீ. வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஃபானி என்ற பெயருடன் கூடிய புயலாக மாற வாய்ப்புள்ளதால் நாளை (திங்கட்கிழமை), 30 மற்றும் 1–ந் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று, நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மண்டல அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்றுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) கரை திரும்ப மீன்துறை துணை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 76 தாழ்வான பகுதிகளை கண்காணிக்க 9 மண்டல அளவிலான அனைத்துதுறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர் 760 உள்ளூர் கிராம மக்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, இயற்கை இடர்பாடு காலங்களில் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் உள்ளூர் மக்களுக்கு தேவையான முதல் உதவிகள் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அனைத்து தொடர்புடைய துறைகள் சார்ந்த அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது.

வானிலை எச்சரிக்கை மைய தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கவும், மேலும் இதுகுறித்து தகவல்கள் பெற கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652– 231077 மற்றும் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04652– 227460 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கனமழை எச்சரிக்கை தொடர்பாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர் (பத்மநாபபுரம்) ‌ஷரண்யா அரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top