புதுக்கடையில் தியாகிகள் நினைவு ஸ்தூபி அகற்றியதை கண்டித்து காங்கிரசார் மறியல்!

புதுக்கடையில் தியாகிகள் நினைவு ஸ்தூபி அகற்றியதை கண்டித்து காங்கிரசார் மறியல்!

in News / Local

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராட்டம் நடத்திய போது துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் நினைவாக புதுக்கடை பஸ் நிலையம் பகுதியில் திரு குமரி அனந்தன் அவர்களால் தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டது.

இந்த ஸ்தூபிக்கு ஆண்டுதோறும் அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தியாகிகள் நினைவு ஸ்தூபி இடித்து அகற்றப்பட்டது. நேற்று காலையில் தியாகிகள் நினைவு ஸ்தூபி அகற்றப்பட்டிருப்பதை கண்டு காங்கிரசார் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் தலைமையில் ஏராளமான காங்கிரசார் புதுக்கடை பஸ் நிலைய பகுதியில் திரண்டு சிலை இடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், நகர தலைவர் முருகன், நிர்வாகிகள் டென்னிஸ், தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரசார் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே இடிக்கப்பட்ட தியாகிகள் நினைவு ஸ்தூபி மீண்டும் அதே இடத்தில் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் கூறினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்தூபி அகற்றப்பட்டதை கண்டித்து காங்கிரசார் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top