குமரியில் தொடர் மழை: பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு

குமரியில் தொடர் மழை: பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு

in News / Local

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாகவே பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழையாக நீடித்த மழை நேற்று முன்தினம் சற்று குறைந்தது. நேற்று பகல் முழுவதும் வெயில் அடித்தது. அதே சமயத்தில் மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சிற்றார்-1 அணை- 8.4 மி.மீ., கொட்டாரம்- 6.2 மி.மீ., பாலமோர்-2.4 மி.மீ., முள்ளங்கினாவிளை-5 மி.மீ. என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினத்தில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறப்பு மதகுகள் வழியாக நேற்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை வரையிலும் உபரிநீர் திறப்பு அதே அளவில் இருந்தது. பின்னர் உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீரும், பாசன கால்வாய் வழியாக 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

பெருஞ்சாணி அணைக்கு நேற்று காலை 376 கன அடி தண்ணீர் வந்தது. மாலையில் 179 கன அடியாக குறைந்தது. சிற்றார்-1 அணைக்கு 30 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 45 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கன அடியும், முக்கடல் அணைக்கு 1 கன அடியும் தண்ணீர் வந்தது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பியதால் 12 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், உபரிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணியாறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் மழை வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top