குமரி மாவட்டத்தில் தொடரும் மழையினால் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது!

குமரி மாவட்டத்தில் தொடரும் மழையினால் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது!

in News / Local

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், தற்போது மழையின் அளவு குறைந்திருந்தாலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வந்த வண்ணம் தான் உள்ளது. நாகர்கோவிலில் நேற்று பகல் முழுவதும் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. இடையிடையே தூறல் மழையும் பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 4.2, பெருஞ்சாணி- 1.6, சிற்றார் 1- 9, சிற்றார் 2- 11, புத்தன் அணை- 1.2, களியல்- 2.2, குழித்துறை- 1, பாலமோர்- 3.2, மாம்பழத்துறையாறு- 1, ஆனைக்கிடங்கு- 4.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 445 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 497 கனஅடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 79 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 117 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. அனைத்து அணைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த தொடர் மழையின் காரணமாக ஏற்கனவே 7 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகர்கோவில் பாறைக்கால்மடத் தெருவில் உள்ள நாராயணன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். அவர்கள் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த வீட்டின் அருகில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியும் இடிந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதி உதவியும் வழங்கினார். மேலும், சேதமடைந்த குடிநீர் தொட்டியை விரைவாக சீரமைக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அவருடன் நகர செயலாளர் சந்துரு, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதேபோல் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வும் வீடு இடிந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். உரிய நிவாரண பணிகளை விரைந்து செய்ய மாநகராட்சி அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். அவருடன் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், எம்.ஜே.ராஜன் மற்றும் பலர் உடன் சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top