குமரியில் 3 டாக்டர்கள் உள்பட 140 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

குமரியில் 3 டாக்டர்கள் உள்பட 140 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

in News / Local

குமரி மாவட்டத்தில் 3 டாக்டர்கள் உள்பட 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 3 பேர் இறந்ததை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தினமும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் டாக்டர் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்த 41 வயது ஆண் டாக்டர் மற்றும் அதேபகுதியை சேர்ந்த 25 வயது பெண் டாக்டர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர மருங்கூர் பகுதியை சேர்ந்த 52 வயது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் வரை 82 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று கொரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து சாவு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.

அதாவது மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவர் கேபிள் டி.வி. நடத்தி வந்தார். இவர் காய்ச்சலால் அவதிப்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து அவர் உடல் சின்னவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியை சேர்ந்த 78 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் திருவட்டார் கண்ணூர் பகுதியை சேர்ந்த 46 வயது ஆண் என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 222 ஆக இருந்தது. நேற்று புதிதாக 140 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 362 ஆக உயர்ந்து உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top