குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 33 வயது வாலிபருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் நேற்று முன்தினம் காலையில் திருமணம் நடந்தது. இதில் மணமகன் வீட்டார் சார்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், திருமணம் முடிந்ததும் மாலையில் பெண் வீட்டார் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
முன்னதாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சாத்தூரில் இருந்து 25 வயது மணப்பெண் உள்பட 9 பேர் குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதாவது, அவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் பரிசோதனை முடிவு வந்தது. இதில் மணப்பெண்ணுக்கும், அவருடன் வேனில் வந்த 25 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நேற்று காலையில் சுகாதாரத்துறையினர் திருமணம் நடந்த வீட்டுக்கு வந்தனர். பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட மணப்பெண்ணையும் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மணமகனையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மணமகன் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். மணப்பெண் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், திருமண வீட்டில் இருந்த உறவினர்கள் 18 பேரிடம் சளி மாதிரி எடுத்துச் செல்லப்பட்டது. அவர்களையும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, சுகாதார ஆய்வாளர்கள் அன்வர் அலி, பிச்சையா, கிராம சுகாதார செவிலியர் மேரி, கிராம நிர்வாக அதிகாரி கலைவாணி ஆகியோர் சென்று பேரூராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தும், பிளிச்சிங் பவுடர் தூவியும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட மற்றொரு பெண், திருமணம் முடிந்ததும் சொந்த ஊருக்கு சென்றதால் அவர் பற்றிய விவரம் அங்குள்ள சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு, மணமகனும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
0 Comments