குமரியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா

குமரியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா

in News / Local

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு குமரி மாவட்ட எல்லை பகுதியில் 3 இடங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றுபவர்கள் மீது சுகாதார பணியாளர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள். 

நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்த வரையில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

ஆனாலும் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது அகஸ்தீஸ்வரம்-2, கிள்ளியூர்-1, குருந்தன்கோடு-4, மேல்புறம்-4, தோவாளை-1, தக்கலை- 1, நாகர்கோவில் மாநகராட்சி- 8 மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 3 பேர் என மொத்தம் 24 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகராட்சியில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 900-ஐ நெருங்கி உள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 80-க்கும் அதிகமான இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,326 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் டோஸ் இரண்டையும் சேர்த்து மொத்தம் 48 ஆயிரத்து 20 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top