ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு நாகர்கோவிலில் மேலும் 8 வியாபாரிகளுக்கு கொரோனா சந்தையாக செயல்பட்ட பஸ்நிலையம் மூடப்பட்டது

ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு நாகர்கோவிலில் மேலும் 8 வியாபாரிகளுக்கு கொரோனா சந்தையாக செயல்பட்ட பஸ்நிலையம் மூடப்பட்டது

in News / Local

கொரோனா ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் இருந்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த வியாபாரியின் கடையும், அவர் காய்கறிகள் கொள்முதல் செய்த மொத்தக் கடையும் மூடப்பட்டது. பின்னர் காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் மேலும் 8 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

உடனே அந்த 8 வியாபாரிகளும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதை தொடர்ந்து வடசேரி தற்காலிக காய்கறி சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சந்தையில் விடுபட்ட வியாபாரிகள், ஊழியர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள் என அனைவருக்கும் சளி மாதிரிகளை சேகரிக்கும் பணி நடந்தது. அதன்படி நகர்நல அதிகாரி கின்ஷால் மேற்பார்வையில் மருத்துவக்குழுவினர் வடசேரி சந்தை வியாபாரிகள், ஊழியர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 185 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து வடசேரி தற்காலிக சந்தை செயல்பட்ட பஸ் நிலையத்தின் 3 வாயில்களும் அடைக்கப்பட்டு சந்தை மூடப்பட்டது.

இந்த சந்தைக்குள் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அந்த சந்தையில் பணியாற்றிய மற்ற வியாபாரிகள், ஊழியர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், சந்தைக்கு வந்து சென்ற பொதுமக்கள் ஆகிய அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் செயல்பட்டு வரும் அப்டா மார்க்கெட்டில் பணிபுரியும் ஒரு சுமைதூக்கும் ஊழியர், காய்கறிகள் மற்றும் பொருட்கள் ஏற்றி வந்த 2 லாரி டிரைவர்கள் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சந்தையில் சுமை தூக்கும் ஊழியர் பணியாற்றிய கடை மற்றும் அதன் அருகில் உள்ள சில கடைகளை மூட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த கடைகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டார். சுமைதூக்கும் ஊழியர் மற்றும் டிரைவர்கள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் சேகரித்து வருகிறார்கள். இதனால் அப்டா மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளும், பணியாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் குமரி மாவட்டத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் குமரி மாவட்டத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 50 பேருடன் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 565 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் வடசேரி சந்தையில் பழ வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கடையில் வேலை செய்த தொழிலாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 3 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் ஒருவர் தக்கலை பரைக்கோடு பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அப்பா-அம்மாவுடன் வசித்து வந்தார். அவர்களுக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இன்னொருவர் தக்கலை பனவிளையை சேர்ந்த 33 வயது வாலிபர். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மற்றொருவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 32 வயது வாலிபர் ஆவார்.

தக்கலை பகுதியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பரைக்கோடு, பனவிளை பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் போடப்பட்டது. அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top