கலெக்டர் அலுவலகத்தில் இ-சேவை மையத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

கலெக்டர் அலுவலகத்தில் இ-சேவை மையத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

in News / Local

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க பொதுமக்கள் வர வேண்டாம் என்றும், அருகே உள்ள இ-சேவை மையம் மூலமாக மனுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவுறுத்தி உள்ளார்.

எனவே கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள் அங்குள்ள இ-சேவை மையம் மூலமாக மனுவை அனுப்பி வருகிறார்கள். இதன் காரணமாக இ-சேவை மையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே சமூக இடைவெளியை பின்பற்றி மனு அனுப்பும்படி பொதுமக்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இ-சேவை மையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான் தலைமையில் கவச உடை அணிந்த பணியாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலக இ-சேவை மையத்துக்கு வந்தனர். ஆனால் சளி மாதிரி சேகரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்க அனுமதிக்கும்படி பொதுமக்களிடம் பணியாளர்கள் கேட்டதும் அவர்கள் அச்சம் அடைந்தனர். எங்களுக்கு கொரோனா இருக்காது என்று கூறியபடி அவர்கள் அங்கிருந்து மனு அளிக்காமலேயே அவசர, அவசரமாக திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சிலர் தாங்களாகவே முன் வந்து சளி மாதிரி எடுக்க அனுமதித்தனர். அவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 15 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சுகாதார ஆய்வாளர் ஜான் கூறுகையில், பொதுமக்கள் சளி மாதிரி எடுக்க அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. சளி மாதிரி எடுக்கும்போது தொண்டையில் வலி ஏற்படும் என்ற தவறான தகவல் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அவ்வாறு கிடையாது. இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதுமட்டும் அல்லாது தங்களுக்கு கொரோனா இருக்காது என்று நினைத்துக் கொண்டு பரிசோதனையை தவிர்ப்பதை பொதுமக்கள் கைவிட வேண்டும். பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top