கோவையில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ் கண்டக்டருக்கு கொரோனா

கோவையில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ் கண்டக்டருக்கு கொரோனா

in News / Local

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு மீண்டும் அரசு பஸ்சில் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் பணிக்கு வந்தார். கோயம்புத்தூர் நாகர்கோவில் அரசு பஸ்சில் கண்டக்டராக சென்றார். நேற்று முன்தினம் இரவு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு பஸ் நாகர்கோவில் வந்து கொண்டிருந்தது.

நேற்று அதிகாலை நேரத்தில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவருக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் பஸ் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்தது. உடனே உயர் அதிகாரிகள் பஸ்சை வடசேரி பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பணப்பெட்டியை அங்கிருக்கும் ஊழியர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து கண்டக்டர் பஸ்ஸை விட்டு இறங்கி பணத்தை அங்கிருந்த ஊழியரிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாகத் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

அரசு பஸ் கண்டக்டருக்கு கொரோனா தொற்று இருந்த தகவல் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியவந்தது. சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். கண்டக்டர் ஒப்படைத்த பணப்பெட்டியை இரண்டு நாட்களுக்கு எடுக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டதுடன் பணப்பெட்டி மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அந்த பஸ்சின் டிரைவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஆவார். அவரும் உடனடியாக தூத்துக்குடி சென்று விட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் யார்? யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

கண்டக்டர் மூலமாக பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு மீண்டும் அரசு பஸ்சில் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் சென்ற வாகனம் எது என்ற விவரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top