குமரி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி

குமரி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி

in News / Local

குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது. 

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் பண்டிகை ஆகும். உயிர்ப்பு விழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை அரசராக பாவித்து கழுதையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றார்கள். அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் குருத்தோலை திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று அனைத்து கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது. இயேசு கிறிஸ்துவை ஊர்வலமாக அழைத்து சென்றபோது மக்கள் ஒலிவ மர கிளைகள் மற்றும் இலைகளை கையில் ஏந்தியபடி ‘ஓசன்னா’ என்ற பாடலை பாடியபடி சென்றனர். அதை போலவே நேற்றும் குமரி மாவட்ட ஆலயங்களில் மக்கள் குருத்தோலைகளை ஏந்தி ‘ஓசன்னா’ பாடல் பாடி சென்றனர். மேலும் ஆலயங்களிலும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை பவனி மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. மறை மாவட்ட பொருளாளர் பென்சிகர், மறை வட்ட முதல்வர் மைக்கேல் ஆஞ்சலூஸ், பங்கு தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்கு தந்தை கிஷோர் மற்றும் சிறுவர்-சிறுமிகள், பங்கு மக்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

இதே போல வடசேரியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் குமரி சி.எஸ்.ஐ. பேராயர் ஏ.ஆர்.செல்லையா தலைமையில் சிறப்பு ஆராதனை மற்றும் குருத்தோலை பவனி நடந்தது. மேலும் பல்வேறு ஆலயங்களில் குருத்தோலை பவனியானது நடைபெற்றது. 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top