கன்னியாகுமரி கடலில் மிதந்த பெண் பிணம் - போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி கடலில் மிதந்த பெண் பிணம் - போலீஸ் விசாரணை

in News / Local

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், நேற்று காலையில் சுற்றுலா பயணிகள் சிலர் கடலின் அழகை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது, காந்தி மண்டபத்தின் பின்புறம் கடலில் ஒரு பெண் பிணம் மிதந்து வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி, ஏட்டு நீலமணி ஆகியோர் கடற்கரைக்கு விரைந்து சென்று கடலில் மிதந்த பெண் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பிணமாக கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். இடது கையில் கருப்பு நிற கயிறு கட்டியிருந்தார். அந்த பெண்ணை குறித்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அப்போது, நேற்று முன்தினம் இரவு அந்த பெண் நீண்ட நேரமாக கடற்கரையில் அமர்ந்திருந்தது தெரிய வந்தது. இதுபற்றி கடற்கரையில் உள்ள வியாபாரிகள் கூறும்போது, அந்த பெண் மலையாளத்தில் பேசியதாக தெரிவித்தனர். எனவே, அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், பிணமாக கிடந்தவர் யார்? அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது, கடலில் குளித்த போது அலையில் இழுத்து செல்லப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top